மாநிலங்களவையில் இன்று (27.02.2013) இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி விவாதம் நடத்தப்பட்டது. இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித், ‘இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்தியா வலியறுத்தி வருகிறது. அதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது. எவ்வளவு வெறுப்பு, கோபம் இருந்தாலும் இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது’ என்றார்.
மந்திரியின் இந்த பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.