தமிழர்களின் உரிமையை நிலைநாட்டக் கோரியும், கச்சத்தீவை மீட்க கோரியும் இராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த 100 பேர் இன்று காலை இராமேஸ்வரம் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்த நிறுத்தினர். இதையும் மீறி அவர்கள் அனைவரும் அக்னி தீர்த்தம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது சிலர், இலங்கை அதிபர் ராஜபக்ச உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கச்சதீவை மீட்டால் மட்டுமே மீனவர் தாக்குதலை நிறுத்த முடியும் என முழக்கமிட்டனர். கச்சதீவை மீட்க கோரி திடீரென மக்கள் விடுதலை கட்சியினரின் போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.