மியான்மரிலிருந்து வங்காள விரிகுடா கடல் மார்க்கமாக வந்த ஒரு பெரிய படகில், பர்மா நாட்டை சேர்ந்த 108 நபர்கள் இருந்ததை இந்தியக் கடற்படையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும், கடந்த மாதம் 15-ம் தேதி அன்று பர்மாவிலிருந்து புறப்பட்டு, அனுமதியின்றி இந்த படகில் வந்திருக்கிறார்கள்.
வரும் வழியில் கடந்த ஒரு வாரமாக, அவர்கள் உணவின்றி தவித்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உடலில் உணவுச்சத்தும், நீர்ச் சத்தும் இன்றி மெலிந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டிருக்கிறார்கள். இதில் 3 வயது குழந்தை இறந்துவிட, சடலத்தை கடலில் போட்டுள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடித்த கடற்படையினர், உணவின்றி தவித்த அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தமான் நிகோபார் தீவில் உள்ள, திக்லிபூர் போலீஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.