இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல, அது திட்டமிட்ட இனப் படுகொலையே என்பதை இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்த வேண்டும்.
இனப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வழிவகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய தீர்மானத்தை ஜெனிவாவில் நடைபெற உள்ள மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்ற இந்தியா முன் முயற்சி எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 17 அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று (04.03.2013) காலை நுங்கம்பாக்கம் பகுதியில் இலங்கை தூதரகம் செல்லும் சாலைகள் அனைத்திலும் தமிழ் உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பின்னர் அனைத்து திசைகளிலும் இருந்து இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட கருப்புக் கொடி ஏந்தியவாறு முழக்கமிட்டபடியே அனைவரும் சென்றனர்.
அப்போது இலங்கை தேசியக் கொடி மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச ஆகியோரின் உருவபொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. பின்னர் முற்றுகையிட சென்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தமிழ் அமைப்புகள் ஒட்டு மொத்த போராட்டம் காரணமாக நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது .