2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதை மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அம்பலப்படுத்தியது. இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததையும் தனது விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இப்போது, நாடு முழுவதும் ரூ.52 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு தெரிவித்து உள்ளது.
விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் விவசாய பணிகளுக்காக கடன் வழங்குகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதுபற்றி ஆய்வு செய்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விவசாய கடன் ரத்து மற்றும் கடன் நிவாரண திட்டத்தின்படி, நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3 லட்சத்து 69 ஆயிரம் சிறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் பிற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.52 ஆயிரத்து 516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாய கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்கு கடன் வழங்கப்பட்டு, பின்னர் அவர்கள் கடன் தள்ளுபடி சலுகை பெற்று உள்ளனர்.
இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.20 கோடியே 50 லட்சம் ஆகும். தகுதி இல்லாத பலர் இந்த திட்டத்தின்கீழ் கடன் வாங்கி கடன் தள்ளுபடி பெற்று பலன் அடைந்து உள்ளனர். கடன் வழங்கிய வங்கிகள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியுடைய பலரது கடனை தள்ளுபடி செய்யவில்லை. 3 ஆயிரத்து 262 விவசாயிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அவர்கள் அடைந்த கூடுதல் பலன் தொகை ரூ.13 கோடியே 35 லட்சம் ஆகும். தகுதியுடைய 1,564 விவசாயிகளுக்கு குறைவாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. 9 மாநிலங்களில் வழங்கப்பட்ட விவசாய கடன் கணக்குகளில் 9 ஆயிரத்து 334 கணக்குகளை தணிக்கை செய்ததில், 1,257 கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது தகுதியுடைய 13.46 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை என தெரியவந்து இருக்கிறது.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 80 ஆயிரத்து 299 கணக்குகளை தணிக்கை செய்ததில் 8.5 சதவீத கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது தகுதி இல்லாத அத்தனை சதவீத விவசாயிகள் கடன் தள்ளுபடி சலுகையை பெற்று உள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக ரூ.164 கோடியே 60 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அதற்காக ஆய்வு கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட வகைகளுக்காக அரசிடம் இருந்து ரூ.5 கோடியே 33 லட்சம் ரூபாயை பெற்று உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
விவசாய கடன் வழங்கியது மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்ததில் மொத்தத்தில் 22.32 சதவீத கணக்குகளில் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்து இருப்பதாக தெரிய வந்து உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிவாரண திட்டத்தில் நடந்த இந்த தவறுகள், முறைகேடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை இந்த திட்டத்தை கண்காணித்து தவறுகள் நடப்பதை தடுத்து நிறுத்த தவறிவிட்டது. சில இடங்களில் ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளது தணிக்கையின் போது தெரிய வந்தது.
அந்த தவறை செய்த வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மீது நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது..
ஏற்கனவே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அமைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.