தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தும் சம்பவம் நடை பெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. தற்போது காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
காரைக்கால் கிழிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. விசைப்படகு உரிமையாளர். இவருக்கு சொந்தமான 2 விசைப்படகில் கடந்த 1-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த செண்பகம், மதியழகன், பரமசிவம், தங்கராசு, வேலாயுதம், வடிவேலு, ஜெகநாதன், குமார், முருகேஷ், செந்தில் சசி, முருகையன் ஆகிய 12 பேர் மீன் பிடிக்க சென்றனர். ஒரு படகை செண்பகம் ஓட்டி சென்றார்.
அவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்தனர். மல்லிப்பட்டினம், கோடிக்கரையில் மீன்பிடித்துவிட்டு நேற்று நள்ளிரவு அவர்கள் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அவர்களை வழிமறித்தது. இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டது.
இதில் படகை ஓட்டி வந்த செண்பகம் மீது குண்டு பாய்ந்தது. அவரது இடது முதுகில் குண்டு துளைத்து காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அதன்பின்னரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்தது. காரைக்கால் மீனவர்கள் வைத்திருந்த வலைகளை கிழித்து எறிந்தனர். மேலும் மீன்களையும் கடலில் தூக்கி வீசினர்.
இதனால் பயந்து போன மீனவர்கள் கைகளை மேலே உயர்த்தி தங்களை விட்டுவிடுமாறு கூறினார்கள். அதன் பின்னர் இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இலங்கை கடற்படை சுட்டத்தில் படகும் சேதமடைந்தது. இதுகுறித்து காரைக்கால் மீனவர்கள் கோடிக்கரை மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே கோடிக்கரையில் இருந்து பைபர் படகில் சென்ற மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த செண்பகத்தை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர். மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் செண்பகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கடலோர காவல்படைக்கும் கியூபிராஞ்ச் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நாகை மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை, வேதாரண்யம், காரைக்கால், ரமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.