பிளஸ்-2 தேர்வில் முறைகேடு: நாமக்கல்லில் தேர்வு கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்!

+2 exam pvt school namakkalதமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கடந்த 11-ந்தேதி நடந்த இயற்பியல் தேர்வில் நாமக்கல் அருகே ஒரு தனியார் பள்ளியில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை மாணவர்களுக்கு அட்டையில் எழுதி காட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

 வெளிமாவட்டத்தை சேர்ந்த 150 ஆசிரியர்கள் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 14-ந் தேதி நடைபெற்ற கணிதத் தேர்வை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் 3 இயக்குனர்கள் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு கண்காணித்தனர். வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.

 இந்த தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெற கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து 3-வது முறையாக தலைமை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட 30 முதன்மை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு வேறு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இதே போல் மாவட்டம் முழுவதும் அறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 1300 ஆசிரிய, ஆசிரியைகளை வேறு மையங்களுக்கு மாற்றி 15.03.2013 மாலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மாற்றப்பட்டுள்ள புதிய மையத்தின் பெயர், ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் 15.03.2013  மாலையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

 இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த உத்தரவை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ளனர். 15.03.2013  மாலை தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அப்போது தலைமை ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய புதிய மையத்துக்கான உத்தரவு நேரில் வழங்கப்பட்டது. அப்போது முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது:-

 அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகள் அடுத்த வாரம் நடக்கிறது. எனவே முதன்மை கண்காணிப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். தனியார் பள்ளிக்கு செல்லும் முதன்மை கண்காணிப்பாளர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் உதவியாளர், அரசு பள்ளியை சேர்ந்தவராக இருக்கிறாரா? என்பதை கவனிக்க வேண்டும்.

 2 அறைகளை கண்காணிக்க ஒரு பறக்கும் படை உறுப்பினரை நியமித்துள்ளோம். அறை கண்காணிப்பாளரை தேர்வு அறைக்கு அனுப்பும் போது அவர்கள் அதே பாடத்தை சேர்ந்த முதுகலை ஆசிரியராக இருக்க கூடாது. இதை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

Leave a Reply