இலங்கை நெடுந்தீவில் அரசு, ஈ.பி.டி.பி யின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை என்று அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவிடம் கண்ணீர் மல்க மக்கள் கதறியழுதனர்.
நெடுந்தீவிற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலான கூட்டமைப்பின் விசேட குழுவினரிடம் தமது அன்றாடப் பிரச்சினைகளையும் தம்மீதான அடக்கு முறைகளையும் தடுத்து நிறுத்துமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட பல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.
இதன்போது கூட்டமைப்பின் குழுவினடம் அன்றாட வாழ்வில் ஈ.பி.டி.பி யின் தலையீடுகள், தம் மீதான அடக்குமுறைகள், பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியில் காணப்படும் பாரபட்சங்கள் தொடர்பில் மக்கள் கண்ணீர் சிந்திய வண்ணம் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ஈ.பி.டி.பி யினர் தமது உறவினர்களுக்கு மட்டும் உதவிகளை அள்ளி வழங்குவதாகவும் இதற்கு அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
வாழ்வாதார உதவிகள், வீதி, போக்குவரத்து, வீடுகள் உள்ளிட்ட எந்த அபிவிருத்தியும் இதுவரையில் நெடுந்தீவில் மக்களுக்கு செய்யப்படவில்லை என்று மக்கள் தெரிவித்ததோடு தமக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.