வேலூர் வி.ஐ.டி.யில் நடந்த மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையில் மாணவர்கள் போராடியதன் காரணமாகவே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மாணவர்கள் வீதியில் நின்று போராட முடியாது. ஆகவே இலங்கை தமிழர் பிரச்சினையை முன் எடுத்து செல்லும் வகையில் தமிழக அரசு ஒருமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசு தமிழக முதலமைச்சர் சொன்னதையும் கேட்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னதையும் கேட்கவில்லை. அமெரிக்க தீர்மானத்தில் எழுத்து மூலமான தீர்மானம் எதையும் கொண்டு வரவில்லை. ஐ.நா.சபையில் அந்த தீர்மானம் நீர்த்து போனதற்கு இந்திய அரசே காரணம். வாக்களித்ததுடன் இந்திய அரசு தனது பங்கை நிறுத்திக் கொள்ளாமல் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மொத்தத்தில் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.