திருச்சியில் காங்கிரசார்–மாணவர்கள் இடையே பயங்கர மோதல்!

cong4இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் உண்ணாவிரதம், ரெயில் மறியல் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சி, கரூர், பெரம்பலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே எல்.கே.எஸ்.மகாலில் இன்று (27.03.2013) காலை நடைபெற்றது. இதற்காக திருச்சி, கரூர், பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டம் நடந்த மகால் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே வரவேற்பு பேனர்களையும், கட்சி கொடிகளையும் கட்டி இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ஞானதேசிகன் கூட்ட அரங்குக்கு வந்ததும், கூட்டம் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கட்சி நிர்வாகிகளும் மாநிலத்தலைவரை வரவேற்க வெளியில் காத்து இருந்தனர். அப்போது தமிழீழ ஆதரவு கல்லூரி மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் காங்கிரஸ் கூட்டம் நடைபெற இருந்த அரிஸ்டோ ரவுண்டானா அருகே திரண்டனர். அவர்கள் கையில் கறுப்பு கொடிகளை கொண்டுவந்திருந்தனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு கறுப்பு கொடி காட்ட திட்டமிட்டிருந்தனர்.

congதிடீர் என்று மாணவர்கள் அங்கிருந்த காங்கிரஸ் கட்சி பேனர்களையும், கொடிகளையும் ஆவேசத்துடன் கிழித்து எரிந்தனர். இலங்கை தமிழர் படுகொலைக்கு காங்கிரசே காரணம் என்று கூறி, கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தை கண்ட போலீசார் அங்கு ஓடி சென்று மாணவர்களை கைது செய்ய முயற்சித்தனர்.

trichy congஅதற்குள் கூட்ட அரங்குக்கு வெளியே நடந்த மாணவர்களின் போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு தகவல் பரவியது. உடனே காங்கிரஸ் கட்சியினர் கூட்ட அரங்கில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அவர்கள் அங்கு கிடந்த கம்பு, தடிகளை எடுத்துக்கொண்டு மாணவர்களை தாக்க தொடங்கினார்கள்.

con5

அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒரு சில மாணவர்கள் மீது அடியும் விழுந்தது. காங்கிரசார் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காங்கிரஸ் கட்சியினரும் மாணவர்களை விரட்டி சென்றனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் சென்ற பஸ்களையும், வாகனங்களையும் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஞானதேசிகன் அந்த வழியாக காரில் வந்தார்.

cong3அவர் காரில் இருந்து இறங்கி மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசனிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தொண்டர்களை கூட்ட அரங்குக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு காங்கிரசார் மறியலை கைவிட்டு கூட்டத்துக்கு சென்றனர். அதன்பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

congஇதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மாணவர்களை இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சந்தித்து பேசினார்.மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply