திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளராக இருப்பவர் முரளிதரன். இவர் மீது சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரிகள் நடத்தி கற்கள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன்மாதம் 1-ந்தேதி அய்யம்பாளையம் வி.ஏ.ஓ பரஞ்ஜோதி, பட்டி வீரன்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் முரளிதரனிடம் விசாரணை நடத்தும் போது அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர் தங்கவேலு, குவாரிக்கு வெடிமருந்து சப்ளை செய்த நிலக்கோட்டை சதீஸ், டிராக்டர் கொடுத்த மல்லணம்பட்டி ராஜாராம், சித்தரேவு அப்துல்ஹக்கீம், ஆட்களை வேலைக்கு சேர்த்த அய்யம் பாளையம் சடையாண்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஐ.பெரியசாமியும், முரளிதரனும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். கடந்த 21-ந்தேதி முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் குவாரி முறைகேடு வழக்கில் தன்மீதான வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி, பட்டிவீரன்பட்டி போலீசார் பதில் மனு செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் கருணாகரன் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஐ.பெரியசாமி, முரளிதரன், தங்கவேலு உட்பட 7 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்க உள்ளது