இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது : பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

 jayalalitha

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (07.01.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும், மீண்டும் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவதும்,  சிறையில் அடைக்கப்படுவதும் சொல்ல  வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு எனக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய தொடர் அத்துமீறல்கள் தமிழக மீனவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்துள்ளது.

2013-டிசம்பர் 28, 29-ந் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 40 பேரும், அவர்களது 9 மீன் பிடி படகுகளும் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டதை நான் 30.12.2013 அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டு இருந்தேன். சமீபகாலமாக கடலோரப் பகுதிகளில் வல்லத்தில் சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களால் கூட இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் தங்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பாரம்பரிய இடங்களுக்கு சென்று மீன் பிடிக்க முடியாதபடி, அவர்களது வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-1-2014 அன்று ஐ.என்.டி. – டி.என்-09- எம்.எம் – 178, ஐ.என்.டி. – டி.என்-11-எம்.எம்.-195, ஐ.என்.டி. – டி.என்.11- எம்.எம்.-199, ஐ.என்.டி.-டி.என்.11-  எம்.எம்-357, ஐ.என்.டி.-டி.என்-09- எம்எம்-127 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 5 எந்திரப்  படகுகளில் சென்ற  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து சென்று மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வழக்கமான இடத்தில் அவர்கள் அமைதியாக மீன் பிடித்துக்  கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அவர்களை பிடித்து சென்று விட்டது.

இப்படி கடத்திச் செல்லப்பட்ட 250 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டு வாடிவதங்கி உள்ளனர். அவர்களது 79 மீன்பிடி படகுகள் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இலங்கை ராணுவத்தினர் சேதப்படுத்தி விட்டனர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்க செல்லும் ஆயுதம் இல்லாத, அப்பாவி தமிழக மீனவர்களை தினம், தினம் இலங்கை கடற்படை விரட்டியபடி உள்ளது. இதன் மூலம் பாக்ஜல சந்தியில் இலங்கை கடற்படை தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்கிறது.

இந்திய அரசு நம்பிக்கை அளிக்கும் வகையில், போதுமான  அளவுக்கு இலங்கையை கண்டிக்காததே இத்தகைய தொடர் அடாவடிக்கு காரணமாகும். இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு மீனவ சமுதாய மக்களிடம் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு தன் சொந்த குடிமக்களுக்கு ஏற்படும் இந்த இழப்புகளை அவர்கள் குடும்பத்தினர் படும் துன்பத்தை திறமையாக தடுக்க முடியாமல், மீனவர் களின் அல்லலை உணராமல் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழை மீனவ குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித் தரும் மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இலங்கை சிறைகளில் தவித்தப்படி உள்ளனர்.

அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்த ஒரே சொத்தான மீன்பிடி படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசின் திறமையின்மை, நடவடிக்கை எடுக்காத நிலையே இதற்கு காரணமாகும்.

எனவே தாங்கள் உடனே தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையில் தலையிட்டு தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 250 தமிழக மீனவர்களை மீட்க உடனே உறுதியான நடவடிக்கை  எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

2.1.2014 அன்று சிறை பிடிக்கப்பட்ட 25 மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 84 மீன்பிடி  படகுகளையும் இலங்கையிடம் இருந்து விரைவில் மீட்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத் தில் கூறி உள்ளார்.

pr070114_0131 copypr070114_013-22 copy