செலவில்லாமல் எமக்கு சேறு பூசும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சி மேற்கொள்கிறது : தைப்பொங்கல் விழாவில் மஹிந்த ராஜபக்ஷ

sl pongalஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தைப்பொங்கல் விழா இம்முறையும் நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் 14.01.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சிலர் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். செலவில்லாமல் எமக்கு சேறு பூசும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சி மேற்கொள்கிறது. அன்று ஹிட்லரின் உதவியாளரான கொபேல்ஸ் ஒரு பொய்யை தொடர்ந்து கூறிவந்தால் அதனை மக்கள் உண்மையென்று நம்பிவிடுவார்கள் என கூறியுள்ளார். இன்று எதிர்க்கட்சியும் அதைத்தான் செய்கிறது. இந்த நாட்டில் செய்ய முடியாததை வெளிநாடுகள் மூலம் ஜெனீவாவில் மேற்கொள்வதற்கு திட்டமிடுகின்றனர். இத்தகைய பொய்ப்பிரசாரங்களால் எமது மக்களை ஏமாற்ற முடியாது.

நுவரெலியா மாவட்ட மக்கள் எப்போதும் எம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்துள்ளனர். மாகாணசபை தேர்தலிலும் அது உறுதியானது. உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. செய் நன்றியை மறவாது நான் உங்களைப் பாதுகாப்பேன். எப்போதும் என் மீது மக்கள் நம்பிக்கை வைக்கமுடியும். தைப்பொங்கல் விழாவுக்காக நுவரெலியாவுக்கு வருகை தந்து நுவரெலியா மக்களுடன் அளவளாவுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சிக்குரியது.

வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வருகை தரும் மக்களை விட அதிகமான மக்கள் இம்முறை வருகைதந்துள்ளனர். தமிழ் மக்களைப் போன்றே சிங்கள மக்களும் பெருமளவில் வருகை தந்துள்ளனர். இப்பகுதியில் வாழும் தோட்டப்புற மக்கள் சமய நிகழ்வுகளை முறையாக நடத்துபவர்கள். நான் நுவரெலியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோவில்களில் பூஜை வழிபாடுகளையும் வீதிகளில் சமய பவனிகளையும் கண்டு மகிழ்வேன். மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடுவது வருடம் முழுவதும் பால் தந்து வாழ்வை உயர்த்தும் பசுக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே என்பதை நான் அறிவேன். நாம் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். அதேவேளை இந்த நாட்டின் பால் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். தற்போது நாட்டின் பால் உற்பத்தி நூற்றுக்கு 20 வீதமாக அதிகரித்துள்ளது. நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் பசுக்களை எமது பெரும் சொத்தாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த நாட்டில் பிறந்த சகலருக்கும் சமமான உரிமை உள்ளது. நாம் அதனைப் பெற்றுக்கொடுப்போம். கடந்த காலங்களைப் போலன்றி நாட்டில் சகல பிரதேசங்களும் பல்துறை அபிவிருத்தியைக் கண்டு வருவதை சகலரும் காணலாம். பசு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கிவருகிறது. இந்த நாட்டில் வாழும் அனைவரும் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலைப் பருக வேண்டும். அந்த நாளே எமது வெற்றியின் நாளாகும். இப்போது இந்த நாட்டில் பயம் சந்தேகமின்றி சகலரும் சுதந்திரமாக வாழ முடியும். எவ்வித பேதங்களுமின்றி ஐக்கியமாக வாழ முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.