கல்வி, சமயம் மற்றும் கலைச்சங்கமம்
வற்றாத காவிரி பாய்ந்து வளம் பரப்பும் இறை நீரூற்றுக்கள் – இறைவன் குடியிருக்கும் பல் சமயத்திருக்கோயில்களான திருவரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, நத்தர்ஷா தர்க்கா என அனைத்து சமயத்தினர் நடத்தும் உயர் கல்விக் கூடங்கள், தொழில் கல்விச்சாலைகன், கலைஸ்க் கோயில்கள், நீர்ப்பெருக்கு, இறை ஆலயம், கல்விக் கோயில்கள் சூழ்ந்திருக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி வளாகத்தின் முகமாக அமைந்துள்ளது தூய லூர்து அன்னை திருத்தலம்.
வரலாற்று பின்னணி
கி.பி. 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய இயேசு சபைக்குருக்கள் புனித சவேரியார் தலைமையில் இறைப்பணியாற்றத் தமிழகம் வந்தனர். போர்ச்சுக்கீசிய, ஸ்பானிய, யூத தந்தையர்கள் முந்நூறு ஆண்டுகள், இறைபணி, கல்விப்பணி, கோயில்கலை, அச்சுப்பணி, தமிழ் இலக்கண, இலக்கிய, அகராதிப் பணிகளைச் செய்து வந்தனர்.
19 – ம் நூற்றாண்டில் வங்கக்கடலின் நாகப்பட்டினக் கரையில் அவர்கள் தூய வளனார் கல்லூரியும், தூய லூர்து அன்னை ஆலயமும் கி.பி.1840 களில் அமைத்தனர் (தற்போது மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படும் இடம்) தமிழகத்தின் மையப்பகுதியான காவிரிக்கரையில், மலைக்கோட்டை மா நகரான திருச்சிராப்பள்ளியில் கி.பி.1882-ல் கல்லூரியும், ஆலயமும் இடம் பெற்றன. பழைய ஆலயம் 1882-ல் (தற்போதுள்ள பெல்லார்மின் விடுதி) அமைக்கப்பெற்றது.
புதிய ஆலயம் நூற்றாண்டுகளைக் கடந்து சமய நல்லிணக்கத்தின் சின்னமாய் மலைக்கோட்டை அருகில் கலைக்கோயிலாக 220 அடி உயரத்துடன் 120 குறுங்கோபுரங்களுடன், தூய லூர்து அன்னையின் அருட்கருவூலமாக ஆலயம் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான, அனைத்துச் சமய மக்களின் அருள்பெறும் திருத்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் வெளிநாட்டுப் பயணிகளும், பிற மாநில இந்தியர்களும் நூற்றுக்கணக்கில் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து அருளாசி பெற்றுச் செல்கின்றனர்.
ஆலயக் கலை நுட்பங்கள்
- கோபுர மையத்தில் திரு இருதய ஆண்டவருடன் நான்கு புனிதர்களின் சிற்பங்கள்
- தூய இஞ்ஞாசியார், தூய சவேரியார், தூய இராயப்பர், தூய அருளானந்தர்.
- நாகலிங்கப் பூக்களுடன் அறுபடை வடிவ கோபுரத்தில் 24 விலங்குப் பொம்மைகள்.
- 90 அடி உயரத்தில் இன்னோசை எழுப்பும் ஆலய மணி.
- நுழைவாயிலில் அமல அன்னையின் அழகிய தோற்றம்.
- வண்ண வண்ண ஓவியங்களின் கவின்மிகு காட்சிகள், தந்தை ஹொனோரேயின் கண்ணாடி ஓவியங்கள்.
- கலைக்குவியலாகத் திகழும் நற்கருணைப் பேழையின் கோபுரம்.
- நுழைவாயில் கதவுகளில் அன்னையின் மீது கொள்ளும் சமயப்பற்றுடன் நாட்டுப் பற்றுணர்த்தும் “ Pray for India” என்ற மன்றாட்டு.
- ஆலய வளாகத்தின் ஒரு புறம் பிரான்சு மசேபியேல் குகை – லூர்து அன்னை பெர்னதெத்துக் காட்சி. மற்றொரு புறம் – இருதய ஆண்டவர் மார்கிரேட் மரியாளுக்குக் காட்சி.
- ஆலயத்தைச் சுற்றிலும் பணியாற்றி மறைந்த அடியார்களின் நினைவுக் கற்கள்.
- ஆலய வீதியில் திருச்சிலுவைப் பாதை 14 திரு நிலைகள்.
வரலாற்று வளர்ச்சி
1890 | கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பெற்றன. |
1896 | அஸ்திவாரம் முடிவடைந்தது |
1896-1901 | கட்டிடப் பணி நடைபெறவில்லை. |
1903 | லூர்து அன்னை ஆலயம் கட்டி முடிக்கபெற்றது. |
01.05.1996 | புதுப்பித்தல் பணி தொடங்கபெற்றது. |
07.12.1996 | திருச்சிலுவை உயர்த்தப்பெற்றது |
30.04.1997 | நான்கு திரு உருவங்கள் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. |
10.02.1998 | கோவில் அருட்பொலிவு செய்யப்பட்டது. |
10.02.1999 | திருச்சிலுவைப்பாதை 14 திரு நிலைகள் புனிதப்படுத்தல் |
02.02.2009 | ஆலயச் சுற்றுப்புறம் முழுவதும் மின் ஒளிமயமாக்கல்வழிப்பாட்டுச் சிறப்புகள் |
வழிப்பாட்டுச் சிறப்புகள்
ஆலய தரிசனம் காணும் பக்தர்களுக்கு இறைப்பற்றும் இறை நம்பிக்கையும் மக்கள் சேவையாக மாறுவது எமது இலக்கு.
- நாள்தோறும் 3 மற்றும் ஞாயிறு 4 திருப்பலிகள்
- புதன்கிழமை தோறும் : புனித சூசையப்பருக்குக் குடும்பங்களை ஒப்புகொடுத்தல்
- மாதத்தின் தலை வெள்ளி மாலை : 5.30 – 6.30 திருமணி ஆராதனை
- வெள்ளிக்கிழமை தோறும் : திரு இருதயத்துக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுத்தல்
- சனிக்கிழமை தோறும் லூர்து அன்னைக்கு சிறப்பு மன்றாட்டு
- தினமும் மாலை : 6.00 – 6.30 திருமணி ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம்
குடும்பங்களில் சிறப்பான விழாக்களில் ஏழை எளியோருக்குக் காணிக்கை வழங்குதல்.
இறை இயேசுவின் அன்பும் அன்னை மரியாவின் பணிவும் அரவணைப்பும் என்றும் எப்போதும் நம் குடும்பத்தில் நிலவுக.
-M.அன்பரசன்