திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருகோயில் மற்றும் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருகோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 87 – வது திருத்தலமாகவும், சப்த விடங்க தலங்களில் மூலாதார தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் க்ஷேத்திரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமஸ்காரபுரம், மூலாதாரபுரம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் திருவாதிரை திருநாள் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரை திருநாளில் எட்டு கணங்களுடன் புடைசூழ திருவாரூர் வீதிகளில் ( தியாகராஜர்) சிவபெருமான் பவனி வந்ததாக அப்பர் தேவாரத்தில் பாடியிருக்கிறார். இவ்வளவு சிறப்பு பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருகோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ராபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாதத்தை காட்டி அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடது பாதத்தையும் திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.
முன்னதாக நேற்று இரவு தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து இன்று காலை தியாகராஜருடைய பாத தரிசனம் நடைபெற்றது.
மார்கழி திருவாதிரை இடது பாதமும் மற்றும் பங்குனி உத்திரத்தின் போது வலது பாதமும் ஆக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜருடைய பாதங்களை தரிசனம் செய்யலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாத தரிசனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற்றனர்.
-ஜி.ரவிச்சந்திரன்.
அதேபோல் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருகோயிலிலும் இன்று காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
-எஸ்.ஆனந்தன்.