திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்ககோரியும், அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டியும், மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று கல்லூரி வளாகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளைத்தலைவர் அருண்தேவ் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஆ.பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் ம.கவிநிலவன் ஒன்றிய செயலாளர் த.மதன் நகர செயலாளர் இரா.சுர்ஜித் கல்லூரி கிளை செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி 4 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள மூன்று அரசு கல்லூரிகள் இரண்டு உறுப்புக்கல்லூரிகளிலும் பயிலும் 12 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு 2016-2017 ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை முழுவதுமாக வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை.
குறிப்பாக குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடையாது. கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி கிடையாது. தற்போது கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருக்கும் வரலாற்றுதுறை பேராசிரியர் டி.ராஜேந்திரன் மாணவர்களின் எந்த கோரிக்கைக்கும் செவிமடுப்பதில்லை. மேலும், கோரிக்கைக்காக மாணவர்கள் போராடுவதை ஒடுக்க நினைப்பதோடு அலட்சியம் செய்து வருகிறார். இதன் காரணமாகவே மேற்கண்ட குறைபாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆ.பிரகாஷ் கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லாததால் இந்த பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இவைகளை தீர்த்து வைப்பதற்கும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவர்கள் சங்கத்திற்கும் சுமுகமான உறவு நிலவுவதற்கும் கல்வி பயிலும் சூழல் செம்மை படுவதற்கும் மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும். கல்வி உதவித்தொகை என்பது திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 90 சதவீத மாணவர்களுக்கு சற்று சிரமத்தை குறைக்க பயன்படும் என்பதால், லட்சக்கணக்கில் பாக்கியிருக்கும் அந்த நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டமாக தீவிரமடையும் என்று தெரிவித்தார்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
–ஜி.ரவிச்சந்திரன்.