திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான 2017-2018-க்கான விளையாட்டுப்போட்டிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இல. நிர்மல்ராஜ் துவக்கி வைத்து வைத்தார்.
2017-2018-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்டப்பிரிவால் 03.01.2018 முதல் 05.01.2018 முடிய 21 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கூடைப்பந்து, கபாடி , வாலிபால், கால்பந்து, ஹாக்கி, நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது.
முதல் நாளான இன்று 03.01.2018 திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கால்பந்து, கபாடி, கூடைப்பந்து, மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் 1500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்,
04.01.2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்கில் இருபாலருக்கும் டென்னிஸ் போட்டியும், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆடவருக்கான வாலிபால் போட்டிகளும், ஆடவர் மற்றும் மகளிருக்கான ஹாக்கி போட்டிகளும், 05.01.2018 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மகளிருக்கான கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும், ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ளது.
குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக ரூ.1000-, இரண்டாம் பரிசாக ரூ.750- மூன்றாம் பரிசாக ரூ.500- ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசாக தலா 204 நபர்கள் வீதம் மொத்தம் 612 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்த பரிசுத்தொகையாக ரூ.4,59,000-ம் வழங்கப்பட உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பாபு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், திருவாரூர் வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
-ஜி. ரவிச்சந்திரன்.