ஏற்காட்டில் உள்ள பிரதான சுற்றுலா தளமாக விளங்குவது கிளியூர் நீர்வீழ்ச்சியாகும். ஏற்காட்டில் உள்ள ஒரே நீழ்வீழ்ச்சி என்பதால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து செல்வது வழக்கம். இந்த நீர்வீழ்ச்சிக்கு ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து நீர் உற்பத்தியாகி, ஆறாகமாறி நீர்வீழ்ச்சியை சென்றடைகிறது.
இந்த ஆற்றின் நீரை ஏற்காட்டை சேர்ந்த கிளியூர், அடிக்காடு, குரும்பப்பட்டி, நாலுகால் பாலம், வெள்ளப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். பின்னர் இந்த நீர் ஓமலூர் ஏரியில் கலக்கிறது.
ஏற்காடு டவுன் பகுதியில் செயல்படும் பல்வேறு தங்கும் விடுதிகளின் கழிவு நீர் குழாய் மூலம் இந்த ஆற்றில் கலக்கப்படுகிறது. இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த பொதுமக்கள் சிலர், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பி.டி.ஓ) புகார் அளித்தனர்.
இதனால் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்தர் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை இன்று நேரடியாக ஆய்வு செய்தார்.
ஆற்றில் கழிவு நீர் கலப்பதை 3 நாட்களுக்குள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தடுத்து, தங்கள் வளாகத்திற்குள்ளயே கழிவு நீரை சேகரிக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இன்று நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். தவறும் பட்சத்தில், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீது ஊராட்சி சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்தர் உறுதியளித்துள்ளார்.
-நவீன் குமார்.