பணியாளர்கள் பற்றாக்குறையால் பூட்டி   கிடக்கும் அரசு இ-சேவை மையங்கள்!-பொதுமக்கள் அவதி.

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் செயல்படும் சேவை மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால், அரசின்  சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, கோட்டூர், மன்னார்குடி, முத்துபேட்டை, நீடாமங்கலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் போன்ற ஒன்றிய அலுவலகங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக  தமிழக அரசின் உத்தரவின்படி சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

இந்த சேவை மையங்கள் மகளிர் திட்ட இயக்குநரின் கீழ் இயங்கி வருகிறது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதிவாணன் புதிதாக ஆரம்பித்த போது, அனைத்து சேவை மையங்களும் சிறப்பாக செயல்பட்டு வந்தன. தற்போது பல சேவை மையங்கள் கேட்பாரற்றும் மூடியும் கிடக்கிறது.

இது குறித்து குடவாசல் ஒன்றிய ஆணையர் சந்தானகிருஷ்ணரமேஷ் கூறியதாவது:-

ஏற்கனவே   குடவாசல் ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி  வந்த சேவை மையத்தில் பணிபுரிந்த பெண் பணியாளர் திருமணம் ஆகி சென்னைக்கு சென்று விட்டார்.

ஒன்றியம் சார்பில் புதிதாக பணியாளரை நியமிக்க முடியாது. இதற்கு மகளிர் திட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் புதிய பணியாளர் நியமிக்கப்பட்டு சேவை மையம் திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.     இன்னும் நான்கு நாட்களில் பணியாளர் நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான அரசு வழங்கும் அனைத்து சான்றிதழும் தங்கு தடையின்றி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு இசேவை மையங்களையும்  மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் பார்வையிட்டு குறைகளை சரிசெய்தால் மட்டுமே பொது மக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியும்.

.குமரன்.

Leave a Reply