இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI, Telecom Regulatory Authority of India) சார்பில் தொலை தொடர்பு நுகர்வோர் உரிமை குறித்த கருத்தரங்கு திருச்சியில் சங்கம் ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதுநிலை ஆராய்ச்சி அதிகாரி சுதாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில்ஆங்கிலத்தில் பேசிய அதிகாரிகளை தமிழில் பேசுமாறு கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் தமக்கு தெரியாது எனவும், ஆங்கில மொழிபெயர்ப்புடன் பேசினால் பதில் கூறுவதாகவும் அதிகாரிகள் பதிலளித்தனர். வாடிக்கையாளர்களிடம் முன்னறிவிப்பின்றி ரிலையன்ஸ் தன் சேவையை நிறுத்தியது ஏன்? என்ற கேள்வியுடன் விவாதம் தொடங்கியது.
மேலும், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டி கேபிள் நிறுவனங்கள் செட்- அப் பாக்ஸ் வைப்பதற்கு கூடுதல் பணம் கேட்பதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசு தான் கூடுதல் பணம் வசூலித்துக்கொள்ளுமாறு கூறியதாக பதில் அளித்த அதிகாரி உண்மையை உடைத்தார்.
தமிழக அரசுதான் கூடுதல் பணம் வாங்க சொல்கிறதா? என்று நாம் கேட்ட கேள்விக்கு, ஆம் என்று அந்த அதிகாரி உறுதிபட கூறினார்.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே தமிழக அரசு மீதான நம்பிக்கை கேள்வி குறியானது. கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த அதிகாரியை முற்றுகையிட்டனர்.
இந்திய அரசு பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் ஏவி அதன் மூலம் பல இணைய சேவையை அறிமுகப்படுத்தினாலும், தொலை தொடர்பு சேவை மட்டும் இன்னும் வெகுஜன மக்களுக்கு தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் உள்ளது.
-ச.ராஜா.