இரவு, பகல் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பொது மக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தின் சார்பில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிபறி, செயின் பறிப்பு, குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், மேலும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுப்படும் நபர்களை அடையாளங்கண்டு பிடிப்பதற்காகவும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல இடங்களில் CCTV- (closed circuit television) கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் உன்னிப்பாக கண்காணித்து தகவல் சொல்வதற்காக அதற்கான கட்டுப்பாட்டு அறை இந்த காவல் உதவி மையத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநகர காவல்துறையின் சார்பில் 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்ச்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த காவல் கண்காணிப்பு உதவி மையம் பெரும்பாலான நேரங்களில் ஆள் இன்றி பூட்டிக்கிடக்கிறது. இல்லையென்றால், அனாதையாக திறந்தே கிடக்கிறது. அப்படியே யாராவது அவசர உதவிக்காக இங்கு பணியில் இருக்கும் காவலர்களை அணுகினால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் காவல் கண்காணிப்பு உதவி மையமே இந்த லட்சணத்தில் இருந்தால், மற்ற காவல் உதவி மையங்கள் எப்படி இருக்கும்?
எனவே, மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மக்களும் நிம்மதியடைவார்கள்.
-ச.ராஜா.
-மு.துளசி மணி.