சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு மலைக்கிராமங்களில் வாழ்ந்த தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் பொருட்டு, ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூரத்தி, ஓவியர் மனோ, ராமகிருஷ்ணன், ஏற்காடு இளங்கோ, ஓவியர் ராஜகார்த்திக் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து குழுவை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
“ஏற்காடு மலைகிராமமான புளியங்கடை பகுதியில் பாயும் வானியாற்றை இப்பகுதி மக்கள் கொள்ளுக் காட்டாறு என்றும் இப்பகுதியை “கொள்ளுக்காடு” என்றும் அழைக்கின்றனர். இந்த ஆற்றுப்படுகையை ஒட்டிய ராமசாமி என்பவரின் விளை நிலத்தில் இந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழியில் இறந்தவர்களை புதைக்கும் ஈமச்சின்னமாகும். இது நிலமட்டத்தில் இருந்து 2 மீட்டர் ஆழமும், 158 செ.மீ. விட்டமும் கொண்டதாக அமைத்துள்ளனர். இதன் உட்பகுதி உடைந்து மண் மூடிய நிலையில் காணப்படுகிறது. இதன் வாய்ப்பகுதி 130 செ.மீ. விட்டத்தில் 16 செ.மீ. அகலமும் 18 செ.மீ. நீளம் மட்டும் கல்லால் மூடும்படியும் மற்றப்பகுதி மண் மூடி சாதாரணமாக காட்சியளிப்பதால் இதை எளிதில் கண்டுபடிக்க முடியாத வகையில் அமைத்துள்ளனர்.
இந்த அமைப்பு கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈமச் சின்னமாகும். இதில் இறந்தவரோடு அவர் பயன்படுத்திய பொருள்களையும் இதில் வைத்து புதைப்பார்கள். இதன் மூலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதயில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெரியவருகிறது.
மேலும், இந்த முதுமக்கள் தாழி அமைந்துள்ள பகுதியிலும், பாறைக்கடை கிராம குடிநீர் கிணற்று பகுதியில் உள்ள நாகம்மன் காட்டுப்பகுதியிலும், கீரைக்காடு பெருமாள் கோயில் காட்டுப்பகுதியிலும் புளியங்கடை, மோட்டுக்காடு, சேட்டுக்காடு, புத்தூர் கிராம பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் கோயில்களில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட கை கோடாரிகளும், வாச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதயில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்திருக்களாம் தெரியவருகிறது.
இந்த முதுமக்கள் தாழி மற்றும் கற்கால கருவிகள் உள்ளிட் பழங்கால அடையாளங்களை மக்கள் பாதுகாத்து வருவது ஆச்சர்யபடத்தக்க விஷயமாகும். மேலும் இப்பகுதியை அரசு முறையாக ஆய்வு செய்தால் இன்னும் அரிய வரலாற்று தகவல்கள் வெளிவரும் ” இவ்வாறு அவர் கூறினார்.
-நவீன் குமார்.