இராமேஸ்வரம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற கடற்கரையோரம் உள்ள புனித ஸ்தலங்களில் குவியும் பக்தர்கள், குடும்பத்துடன் நீராடி விட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, திருமணத்தின் போது, அணிவிக்கப்படும் மாலைகள், மங்கலப்பொருட்களை புதுத்துணிகளுடன் கடலில் விடுவதும் வழக்கம்.
இப்படி பக்தர்கள் கடலில் விடும் பொருட்களை, கடலோரம் வசிக்கும் குடும்பத்தினர் சிலர் எடுத்து தங்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி விட்டு பொருட்களை கடலில் விட்டுச் செல்கின்றனர். இதை எடுப்பதற்காக ஆண்களும், பெண்களும் காலை முதல் மாலை வரை மண்களை தோண்டிப்பார்த்து ஏதேனும் பொருட்கள் கிடைக்கிறதா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபடும் முத்தம்மாள் என்பவர் கூறியதாவது:
நாங்கள் நாள்தோறும் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்து விடுவோம். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிலர் தங்கக்காசு, வெள்ளிக்காசு மற்றும் ரூ.5, 10 நாணயங்களை கடலில் விட்டுச் செல்வர். அது நிச்சயம் கரையோரம் ஒதுங்கி மணலுக்குள் சிக்கியிருக்கும். ஆகையால், அதை எடுப்பதற்காக கரையோரம் மணலைத் தோண்டிப்பார்த்து தேடுவோம். எப்போதாவது தங்க, வெள்ளிக்காசுகள் கிடைக்கும். மற்ற நேரங்களில் சில்லரைக்காசுகள் மற்றும் சங்குகள் கிடைக்கும். கூட்டத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.100 முதல் ரூ.200 வரை கிடைக்கும். இதை வைத்துதான் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்கிறார்.
திருச்செந்தூரைச் சேர்ந்த முதியவர் மணிகண்டன் என்பவர் கூறியதாவது:
பெண்கள் கடற்கரையோரம் ஏதாவது பொருட்கள் கிடைக்கிறதா? என்று தேடும் பணியில் ஈடுபடுவர். ஆனால், என்னைப் போன்ற சிலர் மட்டும் கண்ணில் பைனாகுலர் அணிந்து கடல் அலையின் நடுவில் மூழ்கி பொருட்கள் கிடைக்கிறதா? என்று தேடுவோம். உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்த தொழிலில் ஈடுபடுகிறோம். பைனாகுலர் மூலம் தேடுவதால், அடியில் இருக்கும் தங்க, வெள்ளிக் காசுகள், அரிய வகை சங்குகள் கிடைக்கும். முக்குளித்து முத்தெடுப்பது போல், நாங்கள் நாள்தோறும் கடல் அலையில் மூழ்கி பொருட்களைத் தேடி எடுத்து வருகிறோம். சில நேரம் ஒன்றுமே கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் நிலையும் ஏற்படும் என்கிறார்.
வயிற்று பிழைப்பிற்காக தினம், தினம் கடல் அலையில் செத்துப் பிழைத்துவரும் இவர்களை பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.
இவர்களுடைய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் நினைக்கும் போது “திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது.
-க.குமரன்.
Ivargalai parkkum podhu nammai irraivan nandragavaithuirrukiran yendru yennathondukiradu.