தஞ்சாவூர்–மன்னார்குடி செல்லும் சாலையில் 128 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் வடுவூர் ஏரி, பறவைகள் சரணாலயமாக ரம்மியாக காண்போர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்துக்கு இது சுற்றுலாத்தலம் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
காவிரியில் தண்ணீர் வரும் போது அது கண்ணாற்றை அடைந்து, அங்கிருந்து பிரிந்து இந்த வடவூர் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் பறவைகளுக்குத் தேவையான நாவல்மரம், நெல்லிமரம், இழுப்பைமரம், கொடுக்காப்புள்ளி… போன்ற பல்வேறு ரக மரங்கள் செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது.
வடுவூர் ஏரிக்கு பறவைகள் வரத்துக் காலமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் அமைந்துள்ளது. நத்தக்கொத்தி பறவை, கூழைக்கிடா நீர்க்காகம், பாம்புதாரா பெரிய கொக்கு, தட்டை அழகு வாத்து, உண்ணிகொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், ஜொலிக்கும் அரிவாள்மூக்கன், நத்தைக் கொத்தி நாரை, சிறிய கொக்கு, நாமக்கோழி, முக்குளிப்பான், கரண்டி மூக்கன், நீல இறகு சிரவி மற்றும் 16 வகையான வாத்து, மூன்று வகையான கொக்கு போன்றவை பல்வேறு வெளியூர்களில் இருந்து இந்த ஏரிக்கு வருகிறது.
இவற்றுக்கு உணவாக ஏரியில் காணப்படும் பாசிகள், மீன்கள் மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் அமைந்துள்ளது. செப்டம்பர் முதல் மார்ச் வரை சீசன் காலம் என்பதால், பல்வேறு பறவைகள் இங்கு வந்து முட்டை இட்டு குஞ்சு பொறித்து தங்கள் இனப்பெருக்க காலமாகவும் அமைத்துக் கொள்கிறது.
மண்டல வனச்சரக அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேட்டையிருப்பு அலுவலர், காவலர், அலுவலர் இருவர் என இந்த ஏரியை பராமரித்து வருகின்றனர்.
இந்த வடுவூர் பறவைகள் சரணாலயம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆனால், வருபவர்கள் சுற்றிச் சென்று பறவைகளைக் கண்டுகளிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
தூரத்தில் பறவைகள் அமர்ந்திருப்பதால் வெறுங்கண்ணால் பார்ப்பது அரிது. பைனாகுலர் மூலம் பறவைகளைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சாலையோரம் பார்வையாளர் மாடம் அமைந்திருந்தும் அது பூட்டியேக் கிடக்கிறது. சுற்றுலாப்பயணிகள் அமர பெஞ்ச் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போதியளவில் இல்லை. இந்த ஏரியை சுற்றியிருப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியில்லை.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வருவதால், இந்த வடுவூர் பறவவைகள் சரணாலயம் குறித்து விரிவாக எடுத்துக் கூற ஒருவரும் இல்லை. அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்க முடியும்.
-க.குமரன்.