கச்சத்தீவு  புனித அந்தோணியார் ஆலய திருவிழாவும்! – அகதிகளைப் போல சென்று திரும்பிய தமிழர்களும்!

கச்சதீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழா நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில்  இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள்  பயபக்தியுடன் கலந்துக்கொண்டனர்.

ஆனால், கச்சதீவு தீவில் இலங்கை அரசாங்கத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கொடிக்கட்டி பறக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக, காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க தலைமையில் சிங்கள மொழியில் ஆடம்பர திருப்பலி இடம்பெற்றது.

இதற்கிடையில், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் டாக்டர். ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழ் மொழியில் ஆடம்பர திருப்பலி இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த  கத்தோலிக்க துறவிகள் மற்றும்  பல மதத் தலைவர்கள் உட்பட, சுமார் 10,000 பேர்  இவ்விழாவில் பங்கேற்றனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும்  பாதுகாப்பு, உணவு, குடிநீர், மருத்துவம், கழிப்பறை வசதி மற்றும் படகுகளுக்கு தேவையான பாதுகாப்பு… அனைத்து ஏற்பாடுகளையும், இலங்கை கடற்படையினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இலங்கை கடற்படையினர் கட்டிய புதிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது ஆண்டு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், இந்தியாவிற்கு சொந்தமான கச்சதீவில், சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், அகதிகளைப் போல சென்று திரும்ப வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் தவறான அரசியல் நடவடிக்கைதான். 

கச்சதீவை மீட்பதற்கு ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை உச்ச நீதி மன்றத்தில் சட்ட ரீதியாக போராடினார். அவர் மரணத்தைப் போலவே, அந்த வழக்கும் மர்மமாக மறைந்துப் போனது.

கச்சதீவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply