கிளியூர் பாலத்தை புதுப்பிக்க ரூ.2 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு! – பழுதடைந்த பாலத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தில், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் அன்றாடம் இந்த கிராமத்திலிருந்து வயல் வெளிகளுக்கும், வெளியூருக்கும்  செல்வதற்கு இந்த கல்லணை கால்வாய் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். 

மேலும், கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், இந்த பாலத்தை கடந்துதான் தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறது.

கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் ஆறு வெட்டப்பட்டப்போது, கல்லணை கால்வாய் வாய்காலை கடப்பதற்காக கிளியூரில் இந்த பாலம் 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட இந்த பலம் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இந்த பழமையான பாலம் பாலத்தின் அஸ்திவார தூண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது, பழுதடைந்த அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டுமென அப்பகுதி பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் சட்டசபையில் தனது கன்னி பேச்சில் பழுதடைந்துள்ள கிளியூர் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தற்போது தமிழக அரசு கிளியூர் கல்லணை கால்வாய் ஆற்றில் பழுதடைந்துள்ள பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கியதோடு, அதிரடியாக வேலையையும்  தொடங்கியுள்ளது.

இதனை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் நேரில் பார்வையிட்டார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ்க்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply