எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுவனராகவும், அவரது மகன் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைவராகவும், ஏ.ரவிக்குமார் செயலாளராகவும் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை திறக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு, அந்நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழும் அவருக்கு நேரில் வழங்கப்பட்டது.
இந்த அழைப்பினை ஏற்று, சென்னை வேலப்பன்சாவடியில் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, விழாவில் உரையாற்றினார்.
புரட்சித்தலைவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஊரெல்லாம் அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். திரையுலகம்தான் அவர் தாய் வீடு. ஜெ. அவர்களும் திரையுலக தாய்வீட்டிலிருந்து வந்தவர்தான்.
நம்ம திரை உலகத்திலுள்ளவர்களைக் கூப்பிட்டு விழா நடத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். எனக்கும் மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் உள்ள பந்தம் யாருக்கும் தெரியாது. அந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி நடைபெறவே இல்லை.
ஏன் சினிமா உலகத்தை அவர்கள் வெறுக்கிறார்கள்?
சினிமா உலகத்திலிருந்து அரசியலுக்கு இன்னொருவர் வரக்கூடாது என்கிறார்கள். நாங்க சினிமாவுக்கு வரோமா, நீங்க ஏன் அரசியலுக்கு வர்றீங்கன்னு கேட்குறாங்க. ஐயா.. நான் மத்தவங்களைப் பத்தி சொல்லலை. நான் என் வேலையை ஒழுங்கா செஞ்சிட்டிருக்கேன். ஆனா நீங்க உங்க வேலையை சரியா செய்யலையே!
மதிப்புக்குரிய கலைஞர், மூப்பனார், சோ சார் ஆகியோரிடம் எல்லாம் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கத்துக்கிட்டேன். எனக்கு மக்களுக்கு நல்லது செய்யுற கடமை இருக்கு. அதனாலே தான் அரசியலுக்கு வரேன்னு சொன்னேன். அதைச் சொன்னவுடனே, நீங்க ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்து சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஆனால் ஏன் ஏளனம் செய்யுறீங்க?
அரசியல் பூப்பாதை இல்லை.. பாம்புகள் உள்ள பாதை.. முள் உள்ள பாதை.. அது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். திட்டும் அரசியல் வேண்டாம்.. போதும்.. நிறுத்தி விடுவோம்.
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிட முடியாதுன்னு சொல்லுறாங்க. சத்தியமா எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப்போல வேற ஒருவர் பிறந்து வர முடியாது. அவரே பிறந்து வந்தால்தான் முடியும்.
ஆனால், ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான அவருடைய ஆட்சி என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திறமைசாலிகள் ஆலோசனைகளை வைத்து என்னால் அந்த ஆட்சியைக் கொடுக்க முடியும்.
ஆன்மிக அரசியல் என்றால் என்னன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். தூய்மைதான் ஆன்மிகம். தூய்மையான அரசியல். எல்லாரும் ஒண்ணுதான். இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்.
அப்போ திராவிடத்திலே தூய்மை, நேர்மை, ஜாதி மத சார்பற்றது கிடையாதா? ஆன்மிக அரசியல் என்னன்னு இனிமேதான் பார்க்கப் போறீங்க.
ஒரு சின்ன விஷயம்.. அதுக்கு ஒரு பெரிய டிபேட். கொள்கையைக் கேட்டால் தலை சுத்துதுன்னு சொல்றாங்கன்னு. 31-ம் தேதி நான் அரசியலுக்கு வரப்போறேனா இல்லையான்னு சொல்லிருக்கேன். 29-ம் தேதி உங்க கொள்கை என்னன்னு கேட்கிறாங்க. இது எப்படின்னா கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கப் போகும் போதே எனக்கு இன்விடேஷன் வரலையேன்னு. அப்படி கேட்டார் ஒரு சின்னப் பையன் ரிப்போர்ட்டர் கேட்கிறாருன்னு எனக்கு தலை சுத்திச்சு.
பெரிய பெரிய அரசியல் தலைவர்களும் இதையே பேசுறாங்க. பொதுமக்கள்கிட்ட பேசும் போது ரொம்ப ஜாக்கிரதையா பேசுங்க.
புரட்சித்தலைவி ஜெ. இருக்கும் போது ஏன் வரலை? பயமா? மறுபடியும், மறுபடியும் 96-ம் வருடத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
வெற்றிடம் இருக்கு.. ஆமாம்யா. நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கு. தலைமைக்கு வெற்றிடம் இருக்கு. சக்தி வாய்ந்த, திறமை வாய்ந்த மதிப்புக்குரிய ஜெ., கலைஞர் இருவர் இருந்தார்கள். இந்தியாவில் எந்தவொரு லீடரும் ஜெ. போல கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கலைஞர் கட்சியைக் கட்டிக் காப்பாத்தினார். அவர் இப்போ உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஒரு தலைவர் தேவை. தலைமை தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன். நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Karmaveerar kamarajarai patri theriyadavar arasiyalukku varuvadu ?. vaikkuvai kalaiger, Amma yendru pesum ivar karmaveerar patri pesadadu yen?