திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில், “விருக்ஷா முதியோர் காப்பகம்” உள்ளது. அதனை கல்யாணராமன் என்பவர் பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.
இந்த காப்பகம் துவங்கிய போது மின்சார வாரியத்திற்கு காப்பகத்திற்கான மின்சாரம் வேண்டி விண்ணபிக்கபட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட மின் நுகர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி அந்த கட்டணத்தை தொடர்ந்து பத்து வருடங்களாக கல்யாணராமன் மின்சார வாரியத்திற்கு செலுத்தி வருகிறார்.
தற்போது ஜனவரி மாத மின் நுகர்வு தொகையை கல்யாணராமன் செலுத்த சென்ற போது, பத்து வருடங்களுக்குரிய நிலுவை தொகையாக ரூ.70,000 செலுத்தினால்தான் இந்த மாத மின் கட்டணத்தை பெற்றுகொள்வோம் என்று மின்சார வாரியத்தினர் கூறியிருக்கிறார்கள்.
இதனை அறிந்த கல்யாணராமன், நிலுவை தொகைக்கான விளக்கத்தை கேட்டுள்ளார். அப்போது மின்வாரியத்தினர் பத்து வருடங்களுக்கு முன்பு மின் நுகர்வு கட்டணம் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றும், தற்போது அது தவறு என்று ஆடிட்டிங் சம்மந்தபட்ட துறையானது புதிய கட்டணத்தை நிர்ணயித்து பத்து வருடங்களுக்கான நிலுவை தொகையாக ரூ.70,000 கட்டவேண்டும் என்றும் கூறி, காப்பகத்திற்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மின்சார வாரியத்தின் இந்த செயல்பாட்டினால் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு காப்பகத்தில் உள்ள கோபால் என்ற முதியவர் இறந்துள்ளார், அந்த முதியவர் இறந்ததற்கு மின்சார வாரியத்தின் செயல்பாடுதான் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-ஜி.ரவிச்சந்திரன்.