திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தை போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்!

இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இன்று மாலை திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உஷா குழந்தையின்மை சிகிச்சை பெற்று தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். உஷா மற்றும் ராஜா தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர்.

ராஜா ஹெல்மட் அணியவில்லை. இதனால் பயந்துபோன அவர், இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் உஷா மீது, பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உஷா பரிதாபமாக உயிரிழந்தார். காயத்துடன் ராஜா உயிர் தப்பினார்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால், தற்போது திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண் உயிர் பலிக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

-ஆர்.சிராசுதீன்.
-ச.ராஜா.

 

 

 

Leave a Reply