திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசூர் பிரிவு அருகே திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் ( TVS – XL – TN 55 AX 0894 ) மீது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ECS INDIGO CAR ( TN 45 BH 8410 ) கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கொங்கதிராயன் பட்டியை சேர்ந்த நல்லையா மகன் சைவராஜ்(48) சம்பவ இடத்திலேயே பலியானார், பின்னால் அமர்ந்திருந்த மூக்கையா மகன் ஆனந்த்(22) என்பவர் பலத்த காயமடைந்து துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலியான புதுக்கோட்டை மாவட்டம், கொங்குதிரையன்பட்டியை சேர்ந்த சைவராஜ், அசூர் பகுதியில் விவசாய நிலங்களில் தனது ஆடுகளை வைத்து கிடை போட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஆடுகளுக்கு நோய்தடுப்பு மருந்து வாங்குவதற்காக அதேப் பகுதியை சேர்ந்த முக்கையன் மகன் ஆனந்த்(22) என்பவரை, தனது மொபட்டில் கூட்டி கொண்டு, திருச்சி வந்து மருந்து வாங்கி கொண்டு, துவாக்குடி அசூர் பிரிவு சாலையில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றப்போதுதான் இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.
காரில் வந்தவர்களில் பலத்தகாயமடைந்த சாந்தபூசனம், பரிமளம் ஆகிய இருவரும் மருத்துவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுடன் காரில் வந்த மேலும் இருவர் பலத்தகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுக்குறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிக்னல் வேலை செய்யாமல் இருப்பதாலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அந்த இடத்தில் குறுக்குசாலை இருப்பது வெளியூர் வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் தடுப்பு அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-ஆர்.சிராசுதீன்.