திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தண்டாங்கோரை கிராமம் வாளாடியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு வசிக்கும் கிராம மக்கள் எவ்வித சாலை வசதியின்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இன்று (16.04.2018) மாலை சுமார் 05.00 மணியளவில் சாலை பணிகளை மேற்கொள்வதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை தண்டாங்கோரை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
பிறகு வாகன உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கிராம மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தை விடுவித்தனர்.
சுமார் 500 குடும்பத்திற்கும் மேல் வசிக்கும் தண்டாங்கோரை கிராம மக்களின் பிரதான சாலையாக இருப்பது இந்த பாதைதான் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டும், குழியுமாக கிடக்கும் இந்த சாலையில் இருசக்கர, மூன்று சக்கர, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கர்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பெறுவதற்கு அழைக்கபடும் தமிழக அரசின் இலவச அவசர சிகிச்சை வாகனமான 108- கூட இந்த ரோட்டின் நிலையை கண்டு வர மறுக்கும் நிலையில் உள்ளது இந்த சாலை.
இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளிகள் மிகுந்த பாதிப்படைகின்றனர். விரைவில் தரமான சாலை வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
-கே.பி.சுகுமார் & ச.ராஜா.