சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட கீழ் கொளக்கூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் காமராஜ்(39), அதே கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமராஜ்(29) இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு இடையே ஏற்கெனவே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காமராஜ் தனது ஆட்டிற்கு இலை வெட்ட சென்றுள்ளார். அங்கு வந்த ராமராஜ், காமராஜிடம் இலை வெட்டும் மரங்கள் தனது நிலத்தில் உள்ளதாக கூறி அங்கு இலை வெட்ட கூடாது என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஆகியது. உடனே காமராஜ், ராமராஜை ஊருக்குள் வா என பார்த்துக்கொள்கிறேன் என கூறி சென்றுள்ளார்.
பின்னர் மாலை ஊருக்குள் வந்த ராமராஜ்க்கும் காமராஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ராமராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய காமராஜை ஏற்காடு போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-நவீன் குமார்.