தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்த பிறகு, சசிகலாவின் ஆலோசனைப்படி அவசர, அவசரமாக, இரவோடு, இரவாக, தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் ஜெ.ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன்னை ஒரு முறைக் கூட பார்ப்பதற்கு யாரும் அனுமதிக்கவில்லையென்றும், எனவே, அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்காக “தர்ம யுத்தம்” நடத்தப்போவதாகவும், சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார்.
அதன்பிறகு அதிமுகவில் நடந்த குழப்பங்களால், கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி கே.பழனிசாமி முதல்வரானார். ஆளுநரின் உத்தரவுப்படி பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்று அரசு கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், நடராஜ் ஆகிய 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அதையும் மீறி முதல்வர் பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, திமுக கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் பி.வெற்றிவேல் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்து வந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி அனைத்து வாதங்களும், மார்ச் மாதம் எழுத்துப்பூர்வமான வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 27.04.2018 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
தகுதி நீக்கம் செய்ய திமுக கொறடா சக்ரபாணி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது, சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், அதில் தீர்ப்பு வரும் வரையில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
மனுதாரர் மறைமுகமாக தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை அணுகி உள்ளார். சபாநாயகர் உத்தரவிடாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது, சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த வழக்கில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. சபாநாயகர் முடிவெடுக்கும் முன்பே நீதிமன்றத்தை மனுதாரர் அணுகியது தவறு. மனுதாரர் நீதிமன்றம் மூலம் 11 சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க முயல்கிறார். ஆகவே, வழக்கை தள்ளுபடி செய்கிறோம் எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com