திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் நீர்மட்டம், 84 அடியாக குறைந்ததால், பாசனத்துக்கு, 10 நாள் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால், சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பியது. எனவே, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாய பாசனத்துக்காக, கடந்த, பிப்ரவரி 7-ல், அணையில் இருந்து, பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதில், வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு, 220 கனஅடி, இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு, 350 கனஅடி வீதம், நீர் திறந்து விடப்பட்ட நிலையில், மே. 8-ல், நிறுத்தப்பட உள்ளது. அறுவடை நிலையில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர், கடைசி நேரத்தில் கைக்கு எட்டாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்னும், 10 நாள் தண்ணீர் கிடைத்தால், நெற்பயிரை கருகவிடாமல் காப்பாற்ற முடியும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், சாத்தனூர் அணையின், மொத்த நீர்மட்ட உயரமான, 119 அடியில், தற்போது, 84 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மொத்த நீர் கொள்ளளவான, 7,321 மில்லியன் கனஅடியில், தற்போது, 1,859 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு சரிந்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவில், 25 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.
அணையில், தற்போதுள்ள நீரைக் கொண்டு, திருவண்ணாமலை, தானிப்பாடி, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கான, கூட்டு குடிநீர் திட்டங்களை சமாளிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது. எனவே, கூடுதலாக, 10 நாள் அணையில் இருந்து, தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-செங்கம் சரவணக்குமார்.