காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழக அரசு ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால், கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, மே 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்தது.
ஆனால், வரைவு திட்டமும் தாக்கல் செய்யப்படவில்லை; தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவும் இல்லை.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (08.05.2018) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை, அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணையை மே 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்ட நிலையில், மத்திய அரசு, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பொய்களைச் சொல்லி வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிருக்கும் ஊறுவிளைவிக்கும் செயலாகும்.
இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், பொறுமையாகக் கேட்டுக்கொண்டு ‘கை புண்ணுக்கு கண்ணாடி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்; கண்டிக்கிறோம் என்கிற பேரில் மத்திய அரசை மயில் இறகால் வருடிக்கொண்டு இருக்கிறார்கள். இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்மட்டுமல்ல; நீதியை நிந்திக்கும் செயலாகும்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது உண்மையானால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை புழு, பூச்சாகக் கூட மதிக்காத மத்திய அரசு மீதும், கர்நாடக மாநில அரசு மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயங்குவது ஏன்?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com