திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி கற்பகவள்ளி(வயது48), இவர் தஞ்சை மாவட்டம், கல்லணை அருகே உள்ள தோகூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மேலாளராக வேலைப்பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வங்கிக்கு தனது மொபட்டில் காவிரியின் வலது கரையில் திருச்சி- கல்லணை சாலையில் வேங்கூர் பூசைப்படித்துறை அருகே உள்ள காமாட்சியம்மன் கோவில் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், கற்பகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கத் தாலி சங்கிலியை அறுத்து கொண்டு, அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
சம்பவம் நடைப்பெற்ற இடம் ஆள் நடமாட்டம் இல்லாதப் பகுதியாக இருந்ததால், தாலி சங்கிலியைப் பறிக்கொடுத்த கற்பகவள்ளி சப்தமாக கத்தி கதறியுள்ளார்.
இந்நிலையில், தாலி சங்கிலியை அறுத்து கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பிய அந்த இளைஞர்கள், கல்லணை நோக்கி சென்று, கிளியூர் சாலை வழியாக தப்பி செல்லலாம் என எண்ணி அதிவேகமாக சென்றுள்ளனர். அங்கு கல்லணை கால்வாய் ஆற்றில் கிளியூர் பாலம் பழுது காரணமாக இடிக்கபட்டது தெரியாமல் சென்றவர்கள், அங்கு பாலம் இல்லாதை கண்டு வேகமாக திரும்பி வந்துள்ளனர்.
அப்போது இதனை கண்ட கிளியூர் பொதுமக்கள் சிலர், இவர்கள் யார்? ஏன் இவ்வளவு வேகமாக போகிறார்கள்? என்று அந்த பைக்கை வழிமறித்துள்ளனர். ஆனால், அவர்கள் பைக்கை நிறுத்தாமல், கல்லணை நோக்கி வேகமாக சென்றுள்ளனர்.
கல்லணைக்கு சென்றால் ஆட்களிடம் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்த கொள்ளையர்கள், மீண்டும் கிளியூர் நோக்கி அதிவேகமாக வந்துள்ளனர். ஏற்கனவே அந்த பைக்கை மறிக்க முயற்சித்து ஏமாந்தவர்கள் தற்போது அந்த பைக்கை எட்டி உதைத்துள்ளனர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்படி விழுந்தவர்களில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பொதுமக்களை நோக்கி வீசியுள்ளான். பின்னர் பொதுமக்கள் நிறையபேர் ஒன்று கூடியதும், அங்கிருந்து இருவரும் தப்ப முயன்றுள்ளனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த மர்ம நபர்களை விரட்டி பிடித்துள்ளனர்.
அப்போது தோகூரில் இருந்து இவர்கள் வங்கி மேலாளரிடம் தாலி செயினை பறித்து வந்தது பற்றி தகவல் வந்தள்ளது. இதையடுத்து பொதுமக்கள் செயின் பறிப்பு திருடர்களை கட்டி வைத்து உதைத்து விசாரித்தனர். அதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
உடனே திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்டையில், திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிப்பட்ட நபர்களிடம் விசாரித்ததில், திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி(25), அதேப்பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பிரவீன் (எ) பாம்பு பிரவீன்(25) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் பிரபல வழிபறி கொள்ளையர்கள் என்பது போலீசார் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் வழிபறி நடந்த இடம் தஞ்சை மாவட்டம், தோகூர் எல்லைக்கு உட்பட்டது என்பதால், தோகூர் போலீசாருக்கும் இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில், தோகூர் போலீசார், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இருந்து கொள்ளையர்களை அழைத்து செல்ல வந்தனர்.
இந்நிலையில், திருவெறும்பூரில் ஏராளமான வழிபறி சம்பவங்கள் நடந்துள்ளது. அதற்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில் தற்போது இரண்டு கொள்ளையர்கள் பிடிப்பட்டுள்ளதால், அவர்களுக்கும் திருவெறும்பூரில் நடந்த பல வழிபறி கொள்ளையில் சம்மந்தம் இருக்கும் என்றும், அதனால் அவர்களை விசாரணை செய்தால் பல வழக்குகள் முடிவுக்கு வரும் என்றும், காவல்துறை உயர் அதிகாரிகளை திருவெறும்பூர் போலீசார் கேட்டுகொண்டதாகவும், அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இந்த வழிபறிக்கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
பிரபல வழிபறி கொள்ளையர்களை, கிராம பொதுமக்களே விரட்டி பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.சிராசுதீன்.
Parattukkal Nallavishayathil ungal coverage udaviyulladu. Nalai pesukiren.