எடியூரப்பா பதவியேற்பும்! காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் குமாரசாமி தரப்பினரின் எதிர்ப்பும்! -கர்நாடகாவில் களைக்கட்டும் அரசியல் வியாபாரம்…!

திட்டமிட்டப்படி கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் இன்று காலை எளிமையாக நடைப்பெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் வாஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் வாலாவின் நடவடிக்கையை கண்டித்தும், எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள், கர்நாடகா சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கேவு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

15 நாட்களுக்குள் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் முயற்சியில், அக்கட்சி தலைவர்கள் தற்போது ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆனால், நேற்று இரவு முதலே, பல சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக தெரிகிறது.

எது எப்படியோ, கர்நாடகாவில் அரசியல் வியாபாரம் களைக்கட்ட தொடங்கி விட்டது. தேர்தலில் செலவு செய்த தொகையை விட, பல மடங்கு அதிகமான தொகை (அல்லது) அதிகாரமிக்க அமைச்சர் பதவி இன்னும் ஒரு சில நாட்களில் தங்கள் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், அங்குள்ள ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தொடருமா? (அல்லது) கவிழுமா? என்பது இன்னும் இரண்டு வாரத்திற்குள் தெரிந்துவிடும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. K.Venkataraman May 17, 2018 9:06 pm

Leave a Reply