சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் நடைப்பெற்றது. மாநில தலைவர் தேவராஜன் தலைமையில் துவங்கிய கூட்டத்தில் பொதுச்செயலாளர் நல்லமுத்து அனைவரையும் வரவேற்றார். செயல் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
கேரள மாநிலத்தில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.350 வழங்குவதை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும், 1936 வருட சம்பள பட்டுவாடா சட்டப்படி தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தில், பணியிடத்திலேயே சம்பளம் வழங்க வேண்டும், தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் 15 கிலோ எடையுள்ள இயந்திரத்தை மாட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து வெட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும், அதிக நெடியும் விஷத்தன்மையும் உள்ள இரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும், பல ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்,
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் உள்ள 1000–க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுக ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது, மீனவர்களுக்கு மீன்பிடி காலத்தில் மானியம் வழங்குவது போல், மழை காலத்தில் பணி செய்யமுடியாமல் தவிக்கும் உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கலந்துக்கொண்ட சங்க மாநில துணைத்தலைவர் ஜெகநாதன், பொதுசெயலாளர் இளவரி, களஞ்சியம், உள்ளிட்டோர் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.
–நவீன்குமார்.