கர்நாடகா மாநிலத்தில் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சி என்று கூறி பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா வாய்பளித்துள்ளார். ஆளுநரின் இத்தகைய செயல், தலை அரிக்கிறதே என்பதற்காக கொள்ளிக் கட்டையை எடுத்து சொரிந்து கொண்ட கதையாக தற்போது ஆகிவிட்டது. ஆம், கர்நாடகா ஆளுநரின் இந்த தவறான முடிவு, பீகார், கோவா மற்றும் மணிப்பூர் அரசியலில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் அதிக இடங்களை பிடித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து பீகார் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை இன்று மதியம் நேரில் சந்தித்து, கர்நாடகா வழி முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அளித்துள்ளனர்.
இதே போல் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இந்தியா ஒரே நாடு என்பது உண்மையானால், பீகார் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத்திற்கு ஒரு சட்டமும், கர்நாடகா மாநிலத்திற்கு இன்னொரு சட்டமும் எப்படி இருக்க முடியும்?
பீகார் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் பின்பற்றிய விதிமுறைகள் சரி என்றால், கர்நாடகா மாநிலத்தில் பின்பற்றிய விதிமுறைகள் தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை, கர்நாடகா மாநிலத்தில் பின்பற்றிய விதிமுறைகள்தான் சரி என்றால், பீகார், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் பின்பற்றிய விதிமுறைகள் தவறு என்றாகிவிடும்.
ஆக, பால்வாடி குழந்தைகளுக்கு இருக்கும் பக்குவம்கூட ஆளுநர்களுக்கு இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டு மக்களின் வரிப் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், மக்களுக்கு விசுவாசமாகவும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாகவும் இருப்பதற்கு பதிலாக, வேறு யாருக்கோ ஏஜென்டாக செயல்படுகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்நிலையில், ஆளுநர் பதவி அவசியம்தானா? என்ற கேள்வியும் எழுகிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com