தறிக்கெட்டு ஓடும் தனியார் வாகனங்கள்!-விபரீதமான விபத்துக்களால் விலை மதிக்க முடியாத  உயிர்கள் பலியாகும்  அவலம்!

அதிவேகம், அவசரம்,  மதுபோதை, தூக்க கலக்கம், கவனக்குறைவு, போதிய பயிற்சி மற்றும் பக்குவமின்மை.. ஆகிய காரணங்களால், கோரமான சாலை விபத்துக்கள் நாள்தோறும்  நடக்கின்றன. இதனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகும் அவலம் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

வீட்டை விட்டு விட்டு வெளியே சென்றால் மறுபடியும் வீடு திரும்பினால் தான் நிச்சயம். அந்த அளவிற்கு ஒரு நிலையற்றத் தன்மை மக்களை நிம்மதி இழக்க செய்துள்ளது.

நேற்று மாலை திருச்சி, துவாக்குடி, தேவராயநேரி அருகே நடைப்பெற்ற கார் விபத்தும் அந்த வகையை சார்ந்ததுதான்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த (TN 45- BA 0913) கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி, சாலையின் மறுபுறம் சென்று குட்டிக் கரணம் அடித்து கவிழ்ந்ததில், காரில் பயணித்த திருச்சி அண்ணாமலைநகர் அனீஸ்பகத்(வயது19), வெற்றிலைக்காரத்தெரு ஆதிகுட்டி(வயது17), தில்லைநகர் ரீகன்காபியா (வயது17) உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபேஷ் ஷெட்டி என்பவர், திருச்சி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி காவல் துறையினர், இறந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக துவாக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து (FIR NO:67/2018) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்பான பெற்றோர்களே, உங்கள் வாரிசுகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் போதியுங்கள்..

அவர்களின் வெளிவட்டாரத் தொடர்புகளை அன்றாடம் உன்னிப்பாக கவனியுங்கள்.

உங்கள் அனுமதி மற்றும் துணையில்லாமல் இல்லாமல், உங்கள் வாரிசுகளை அடுத்தவர்களின் வாகனத்தில் செல்ல அனுமதிக்காதீர்கள்.

ஆடம்பரத்திற்காக விலை உயர்ந்த அதிவேகமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உங்கள் வாரிசுகளுக்கு பரிசளிக்காதீர்கள்.

ஏனென்றால், ஆடம்பரத்தை விட, அவர்களின் உயிர்தான் அவசியம். உங்களுக்கு மட்டுமல்ல; இந்த தேசத்திற்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்,

படங்கள்: ஆர்.சிராசுதீன்.

Leave a Reply