நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்றத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதையடுத்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்களையும், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட தனிக்கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அமைப்பு ரீதியான அனைத்து கட்டமைப்புகளையும், நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துவிட்டார்.
அரசியலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் தனக்கு போட்டியாக இருக்கும் என்பதால், தேர்தல் களத்தில் அவற்றை எதிர் கொள்ள பணபலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு ஆள் பலம் அவசியம் வேண்டும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் ஆழமாக உணர்ந்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் கிராம உதவியாளர் (தலையாரி) முதல் தலைமை செயலாளர் வரை எவ்வாறு கட்டமைப்பு இருக்கிறதோ, அதே போன்று, தான் தொடங்கவிருக்கும் கட்சியிலும் ஒரு மேற்பார்வை கண்காணிப்பு குழுவை அமைக்கவும் நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் தமது கட்சி நிர்வாகிகளின் நேர் மற்றும் எதிர்மறை செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதோடு, தமது கட்சியின் கொள்கை முடிவுகளை உடனுக்குடன் தொண்டர்களிடமும், மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்று கருதுகிறார்.
மேலும், நாட்டில் மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் சமூக, பொருளாதார பிரச்சனைகளை உடனுக்குடன் கட்சி தலைமை தெரிந்து கொள்ளவும் இது வழிவகுக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்புகிறார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com