காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித்தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை செயல்படுத்த வரைவு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மத்திய அரசு காலம் கடத்தி வந்தது. இதனால் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதம் 14-ம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன. அதன்படி திருத்தங்கள் செய்து 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும், அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.
ஆனால், காவிரி ஆணையம் குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு தாமதித்து வந்தது.
இதற்கிடையில் பாஜக சார்பில் அவசர, அவசரமாக எடியூரப்பா கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். உடனே சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூப்பிக்க முடியாது என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடகா மாநிலத்தில் அரசியல் நாடகமும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், வேறு வழியின்றி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அரசிதழின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com