திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (வயது35) இவரது மனைவி வேண்டா(வயது29) இவர்களுக்கு திவ்யா, அர்சனா என்ற இரண்டு பெண் குழந்தைகள் ஏற்கனவே உள்ளனர்.
இந்நிலையில், 3-வதாகக் கருத்தரித்த வேண்டாவிற்கு, கடந்த (24.05.2018) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் வேண்டாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், மறுநாள் (26.05.2018) வேண்டா அவரது கணவர் சிவக்குமார் மற்றும் கைகுழந்தையுடன் மருத்துவ அதிகாரிகளுக்கு தெரியாமல் மருத்துவ மனையில் இருந்து சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ அதிகாரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி கோட்டாச்சியர் உமா மகேஷ்வரி, வட்டாட்சியர் ரேணுகா ஆகியோர்(27.05.2018) பாச்சல் கிராமத்தில் விசாரணை நடத்தியபோது, சிவக்குமாரும், வேண்டாவும் பிறந்து 3-நாட்களே ஆன பெண் சிசுவை கொன்று எரித்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் விசாரணை மேற்கொண்டார். குழந்தையை எரித்து கொன்ற இவர்களை வட்டார மருத்துவ அலுவலர் Dr.சிந்தனா சங்கர் புகாரின் பேரில், பாச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகுமாரசாமி தலைமையிலான போலிசார் வழக்கு பதிவு (F.I.R. NO: 350/2018) செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுக்குறித்து பாச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகுமாரசாமியிடம் நாம் விசாரித்தோம்.
பெண் சிசுவை எரித்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்து பரிசோதனை கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வறிக்கையின் முடிவை பொருத்துதான் காவல்துறையின் சட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கூறுகையில், 3-வதாக பிறந்த பெண் குழந்தையை எரித்து கொன்ற சம்பவம் வேதனையானது. வறுமை காரணமாக வளர்க்க முடியாவிட்டால், அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்திருக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு கொலை அதிகளவில் நடக்கிறது. பாலின வன்முறை, மைனர் திருமணங்கள் நடக்கின்றன. விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 800 பெண்களே உள்ள நிலையில், பெண் சிசு கொலை நடப்பது விழிப்புணர்வு இன்மையையே காட்டுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வுகள் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கூறினார்.
– செங்கம் சரவணக்குமார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com