திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, வடபாதிமங்கலம் அருகே அரிச்சந்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த பகுதியில் வசிக்கும் பலகுடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயமானது கடந்த ஒருவருட காலமாக திருப்பணி நடைபெற்று வந்தது. தற்போது ஆலயத்தின் திருப்பணி நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் இன்று 04.06.2018 காலை நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு முன் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய யாக சாலை பூஜையானது தொடர்ந்து நான்கு காலம் நடைபெற்று பின் இன்று காலை நான்காம் கால பூஜையில் யாக குண்டத்தில் பட்டு சேலையை செலுத்தி பின் அதனை தொடர்ந்து மகா பூர்ணஹுதியுடன் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.காலை 9.30 மணிக்கு யாகசாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க கடங்கள் விமான கோபுரத்திற்கு சென்றடைந்தது. பின்பு கோபுர கலசங்களுக்கு சரியாக 10.30 மணிக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் செய்து மஹாதீபாராதனைகள் காண்பிக்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதங்களும் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தினை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
– ஜி. ரவிச்சந்திரன்.