திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் உள்ள “மசினி” என்ற கோவில் யானைக்கு கடந்த மாதம் (மே 25) திடீரென மதம் பிடித்து. யானைப் பாகன் கஜேந்திரனை மிதித்தே உருவம் தெரியாதவாறு கொடூரமாக கொன்று போட்டது. மேலும், மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தா்கள் ஓடியதாலும், பல போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, யானையை எங்கு கண்டாலும் பொதுமக்களுக்கும், ஆன்மீக பக்தா்களுக்கும் ஒரு வகையான பயமும், பதட்டமும் தன்னறியாமல் வந்து விடுகிறது. ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை யானையின் அருகில் கொண்டுச் செல்வதற்கே பயப்படுகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரத்தின் இதயமாகவும், முக்கிய வழிப்பாட்டு ஸ்தலமாகவும், சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வரலாற்று புகழ்பெற்ற இடமாகவும், 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் அமைந்திருக்கும், திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் யானை “லெட்சுமி” எப்படி இருக்கிறாள்? என்பதை பார்ப்பதற்காக நேரில் சென்றோம்.
நாங்கள் சென்றது காலை நேரம் என்பதால், குளித்து முடித்து, நெற்றியில் பட்டையுடன் சாந்த ரூபியாக லெட்சுமி காட்சியளித்தாள்.
பயத்துடனும், பயபக்தியுடனும் பக்தர்கள் கொடுத்த பழங்களையும், அருகம் புல்லையும் வாங்கி வாய்குள் திணித்தவாறே, பாகனின் உத்தரவுக்கேற்ப பழம் மற்றும் பணம் கொடுக்கும் பக்தர்களுக்கு, தன் தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தாள். அதை நம்பிக்கையுடன் ஏற்று, பக்தர்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டே இருந்தனர்.
நாம் லெட்சுமியின் எதிரில் நின்று சுமார் 20 நிமிடங்கள் அவளையே உன்னிப்பாக உற்று நோக்கினோம் . அவளது ஒவ்வொரு அசைவுகளையும் அவள் அருகில் நின்றே ரசித்துக் கொண்டிருந்தோம். அவள் யாரையும் பொருட்படுத்தாமல் பாகனின் உத்தரவுக்கேற்ப தன் பணியை செய்துக் கொண்டிருந்தாள்.
லெட்சுமியின் காலடியில் எந்த பதட்டமும், பயமும் இன்றி யானைப் பாகன் விக்னேஷ் அமைதியாக அமர்ந்து இருந்தார்.
அவர் அருகில் சென்று லெட்சுமியை பற்றி விசாரித்தோம். லெட்சுமிக்கு தற்போது 27 வயது ஆகிறது. இதற்கு முன்னால் எனது தந்தை மோகன் லெட்சுமியை பராமரித்து வந்தார். என் தந்தை இறப்பிற்கு பிறகு, என் அண்ணன் ரகுநாதனும், நானும் லெட்சுமியை பராமரித்து வருகின்றோம். லெட்சுமியால் இதுவரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை என்றார்.
அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் பெண்களை “பூமாதேவி” என்று புகழ்கின்றோம். அதே பெண் கோபத்தோடு கத்தினால் “அரக்கி அல்லது ராட்ஷசி” என்று சபிக்கின்றோம். மனிதன் கொட்டாவி விடுவதைப் போலவும், கோபப்படுவதைப் போலவும், தும்முவதைப் போலவும், நாம் வசிக்கும் பூமியும் அவ்வப்போது செய்கிறது. அதை நாம் பூகம்பம் என்றும், நிலச்சரிவு என்றும், இயற்கை சீற்றம் என்றும் சொல்கின்றோம்.
இதமாக வீசினால் “தென்றல்” என்கின்றோம், ஆக்ரோஷமாக வீசினால் புயல் அல்லது சூராவளி என்கின்றோம்.
மனிதர்களுக்கு கோபம் வருவதைப் போல, நாய்களுக்கு எப்போதாவது வெறிப்பிடிப்பதை போல, யானைகளுக்கும் எப்போதாவது அபூர்வமாக மதம் பிடிக்கும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதுவும் உயிர் உள்ள ஜீவன்தான். அப்பேர்பட்ட மகாகவி பாரதியாரைக் கூட, யானை தாக்கியுள்ளது என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால், அடிப்படையில் அது ஒரு மிருகம்.
“காட்டு விலங்கை கூட்டில் வைத்தாலும், கறியும் சோறும் போட்டு வைத்தாலும், மாறாதய்யா மாறது, மனமும் குணமும் மாறாது”– என்ற உண்மையை நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனிதர்கள் கோபப்பட்டால் மிருகமாகி விடுகிறார்கள்…! ஆனால், மிருகங்கள் கோபப்பட்டால் அதற்கு மனிதர்கள் பலியாகி விடுகிறார்கள்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
யானையிடம் இருந்து ஆயிரம் அடிகள் விலகி இருக்க வேண்டும்.
குதிரையிடம் இருந்து நூறு அடிகள் விலகி இருக்க வேண்டும்.
கொம்பிருக்கும் விலங்குகளிடம் இருந்து பத்தடி விலகி இருக்க வேண்டும்.
துரோகம் செய்யும் நபர்கள், ஏமாற்றும் நபர்கள் வாழும் இடத்தில் இருந்து மொத்தமாக விலகி இருக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் உயிரோடு இருக்க முடியும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
Ex. Honorary Animal Welfare Officer, Govt. of India.
ullatchithagaval@gmail.com