தி வீக் (The Week) பத்திரிகை நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தை தட்டிய விவகாரத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சம்மந்தப்பட்ட லட்சுமி சுப்பிரமணியத்திடம் எழுத்துப்பூர்வமாக பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில், சட்டநாதபுரம் வெங்கடராமன் சேகர் என்கின்ற நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் அவர் நண்பர் திருமலை என்பவர் அவரது முகநூலில் பதிவிட்டு இருந்த தகவலை, தன் முகநூல் பக்கத்தில் இணைத்திருந்தார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சார்பில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசார், நடிகர் எஸ்.வி.சேகர் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பில் நீதி மன்றத்தை நாடினார்கள். சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை 01.06.2018 அன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் L.நாகேஷ்வர ராவ், M.சந்தான கவுண்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தன்மையை அறிந்த நீதிபதிகள், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதோடு, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கமான முறையில் ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் வெளிப்படையாகவே காவல்துறையினரின் பாதுகாப்போடு வெளியில் சுற்றித் திரிந்தார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனோடு ஒரு நிகழ்ச்சியிலும் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துக்கொண்டார்.
இதனால் இதுக்குறித்து தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், எஸ்.வி.சேகரை ஜீன் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு அல்லிக்குளம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி இன்று நடிகர் எஸ்.வி.சேகர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அல்லிக்குளம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதியின் விசாரணைக்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com