திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வேம்பனூர் மற்றும் கண்ணுக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வெள்ளாற்றில், கடந்த 1972 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, மணல் திட்டுத்திட்டாக உறைந்துக் கிடக்கிறது.
இப்பகுதியில் இரவு, பகல் எந்நேரமும் மணல் திருட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. வெள்ளாற்றில் இருந்து மணலை டிராக்டர் மூலம் ஏற்றி வந்து, ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு, அங்கிருந்து டிப்பர் லாரியின் மூலம் மதுரை மற்றும் பொன்னமரவாதி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
மேலும், மருங்காபுரி வட்டம், வேம்பனூர், மூவராயபட்டியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக வெள்ளாற்றில் மணலை தோண்டி எடுத்து, டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலமாக, எந்தவித ஒளிவு, மறைவுமின்றி மணலை கடத்திச் செல்கின்றனர்.
இதையெல்லாம் கண்காணித்து தடுக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அனைவரும், மணல் கொள்ளையர்களிடம் மாமுல் வாங்கிக்கொண்டு இந்த மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக மருங்காபுரி வட்டம், வேம்பனூர் மற்றும் கண்ணுக்குழி ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களையும் கவனித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ராஜீ, இந்த மணல் திருட்டுக்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டு வருகிறார். மணல் கொள்ளையர்களிடம் தினமும் ஆயிரக்கணக்கில் மாமுல் பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்து வருகிறார்.
மணல் கொள்ளையர்களிடம் பணம் வசூல் செய்வதற்காக கண்ணுக்குழி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் வேம்புனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் ஆகிய இருவரையும், கிராம நிர்வாக அலுவலர் ராஜீ நியமித்து இருக்கிறார். இவர்கள் இருவரும்தான் கிராம நிர்வாக அலுவலர் ராஜீக்கு, மனச்சாட்சியாக இருந்து செயல்பட்டு மாமுல் வாங்கி தருகின்றனர்.
மணல் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பெருந்தொகைகளில் ஒரு பகுதி, மருங்காபுரி வட்டாட்சியர் கருணாகரனுக்கு சென்று விடுவதால், மணல் திருட்டு குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும், கிராம நிர்வாக அலுவலர் ராஜீக்கே உடனுக்குடன் தெரிந்து விடுகிறது.
மேலிடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே, நாங்கள் ரைடுக்கு வரும்போது மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் ராஜீவின் ஏஜெண்டுகள் மேற்படி பாஸ்கர், முத்துராமன் ஆகியோர் மூலமாக மணல் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் போய்விடுகிறது. இதனால் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து விடுகின்றனர்.
இப்படி சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதால், அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளுக்கு பலகோடி ரூபாய் தனிப்பட்ட முறையில் ஆதாயம் கிடைத்துள்ளது.
இயற்கை வளங்களையும். அரசு சொத்துக்களையும், பராமரித்து, பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, தனிப்பட்ட ஆதாயத்திற்காக மணல் திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.
எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மேற்காணும் வெள்ளாற்றுப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொறுத்திருந்துப் பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com