கல்லணையில் ஆடிப்பெருக்கு விழா!-கல்லணைக்குள் கார், வேன் மற்றும் வாகனங்களுக்கு இன்று அனுமதியில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், இந்த ஆண்டு வருணப் பகவான் கருணையால், கர்நாடகா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால், வேறுவழியில்லாமல் கர்நாடகா மாநில அரசு, உபரி நீர் அனைத்தையும் காவிரியில் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பியது.

அதனால் தமிழக அரசு காவிரி ஆற்றில் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. அப்படி திறந்துவிட்ட தண்ணீரால் காவிரி ஆறு தற்போது கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், கல்லணையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்கு புதுமண தம்பதிகளும், சுற்றுலாப் பயணிகளும், மற்றும் பொதுமக்களும் தற்போது கல்லணையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கல்லணைக்கு வருபவர்கள் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் இறங்கி வழிபாடு செய்யவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், புதுமண தம்பதிகள் வழிபாடு செய்வதற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும், கொள்ளிட ஆற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொள்ளிட ஆற்றில் வழிபாடு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடம் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

சிலர் கோவிலடி பள்ள வாய்கால் கரையில் வழிபாடு நடத்துகின்றனர். அப்படி அந்த பள்ள வாய்காலை தாண்டி செல்லும் மரப்பாலத்தில் உள்ள கட்டைகள் உடைந்துள்ளதால், அந்த பாலத்தில் நடந்து செல்வதற்கு பயப்படுகின்றனர்.

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் எல்லை பகுதியில் கல்லணை அமைந்துள்ளதால், திருச்சி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த மக்கள், திருச்சியிலிருந்து- தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரிலிருந்து – திருச்சிக்கும், கல்லணை வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வழக்கமாக சென்று வருவார்கள்.

ஆனால், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்பதற்காக, எந்தவித முன்னறிவிப்பின்றி கல்லணைக்குள் கார், வேன் போன்ற வாகனங்களை காவல்துறையினர் இன்று காலை முதல் அனுமதிக்கவில்லை. இதனால், தஞ்சையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply