“கூட்டுறவே நாட்டு உயர்வு” என்ற கொள்கை முழக்கத்துடன் 1958-ம் ஆண்டு துவங்கப்பட்ட கூட்டுறவு சங்கம், கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை அமைத்து பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், இயந்திரங்களுக்கான கடன் என பல வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, உரம், பூச்சிக்கொல்லி, விதை போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது.
இத்தகைய நல்ல நோக்கங்களுக்காக செயல்பட்டு வரும் சங்கங்களில் சில, அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக சீர்கேடுகளால், சரிவர இயங்காமல் இருந்தாலும், தவணை பாக்கி இல்லாமல் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களும் நம் மாநிலத்தில் பல இருக்கின்றன.
இப்படி வளம் கொழிக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, நிர்வாகிகளை தேர்வு செய்வதில், தமிழகம் முழுவதும் பல்வேறு கூச்சல், குழப்பங்கள், வம்பு, வழக்குகள்… என்று பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆளும் கட்சிக்காரர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும் பதவியாக கூட்டுறவு சங்கங்கள் இருந்து வருகிறது. சரி அப்படியாவது ஒற்றுமையாக இருந்து பதவியை பங்கிட்டு கொள்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. அங்கேயும் திரை மறைவு இரகசியங்கள் அரங்கேறுகின்றன.
அந்த வகையில், திருச்சி, அரியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பதவி அறிவிக்கப்பட்ட நபர்களின் விசியத்தில், பல்வேறு அதிருப்திகள் நிலவி வருகின்றன. இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவற்றின் விளைவுகள் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
-கே.பி.சுகுமார்.