மேட்டுர் அணை திறந்து விடப்பட்டு 47 நாட்கள் ஆகியும் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: முக்கொம்பு அணையில் உடைந்த மதகுகளை பார்வையிட்ட தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை.

திருச்சி முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை, தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (03-09-2018) நேரில் பார்வையிட்டார்.

மேலும், விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.

இப்பொழுது தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, முக்கொம்பு மதகுகள் போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மதகுகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆய்வு செய்திருந்தால் இதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். முறையான அறிவிப்பு இல்லாத வகையில் திடீர் என்று தண்ணீரை அதிகமான அளவிற்கு திறந்து விட்ட காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அரசினுடைய அலட்சியத்தினால் மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்திட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, “காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது கிடையாது, திடீர் என்று வந்து விடுகிறது” என்று ஒரு அறிவுப்பூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிக்கிறார். அவர் சொன்னது எதை காட்டுகிறது என்றால் “ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல”,  நீரோ மன்னனுடைய வாரிசு போல,ஒரு அபூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மேட்டூர் அணையை பொறுத்தவரையில் கடந்த மாதம் 19-ம் தேதி திறந்துவிடப்பட்டிருக்கிறது. மேட்டுர் அணை திறந்து விடப்பட்டு ஏறக்குறைய 47 நாட்கள் ஆகியிருக்கின்றன. ஆனால், இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரமுடியாத நிலையில் தான் இருக்கிறது.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்த வரைக்கும் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என்கிற நிலையிலே தான் இருந்து கொண்டு வருகிறது.

ஆகவே, திடீர் என்று காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள், காய்ச்சல் வருகிறதோ! வரவில்லையோ! இந்த எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையிலே ஒரு கோமா நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, உடனடியாக இதுகுறித்து, முறையான விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்காது!

ஆகவே, விரைவில் தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலருகின்ற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் மீது, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply